
திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தையர் 6ஆம் பயஸ், 7ஆம் பயஸ்
ஒரு பக்கம் திருத்தந்தைக்கு எதிராக செயல்பட மாட்டேன் என வாக்குறுதி அளித்துக்கொண்டு, மறுபக்கம் திருஅவைச் சொத்துக்களை பறிமுதல் செய்தார் மன்னர்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே!
கடந்தவாரம் திருத்தந்தையர்கள் 13ஆம் கிளமென்ட் மற்றும் 14ஆம் கிளமென்ட குறித்து நோக்கினோம். 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி திருத்தந்தை 14ஆம் கிளமென்ட் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து பதவிக்கு வந்தார், திருஅவையின் 250வது திருத்தந்தை 6ஆம் பயஸ். 1717ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இத்தாலியின் ஏழைக்குடும்பத்தில் Giovanni Angelico Braschi என்ற பெயருடன் பிறந்த இவர் தன் துவக்க கல்வியை இயேசுசபை கல்விக் கூடத்திலும், சட்டக்கல்வியை Ferrara பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1755ல் பாப்பிறை செயலராக நியமிக்கப்பட்டார். திருத்தந்தை 14ஆம் கிளமென்டால் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை 14ஆம் கிளமென்டின் இறப்பிற்குப்பின் கூடிய கர்தினால்கள் 4 மாதங்கள் தங்களுக்குள்ளேயே போராடிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவரே திருத்தந்தை 6ம் பயஸ். இவர் தன்னுடைய உறவினர்களுள் இருவருக்கு மிகுந்த சலுகைகள் காட்டினார். ஒருவருக்கு ஒரு பெரிய மாளிகையைக் கட்டிக்கொடுத்த அதேவேளை, இன்னொருவருக்கு ஒரு பளிங்கு மாளிகையையும் திருஅவை நிலத்தையம் பரிசளித்தார். உரோமை மக்கள் பெரும்பான்மையினோர் ஏழ்மையில் வாடிய அக்காலத்தில், இவ்விரு உறவினர்களும் மன்னர்கள் போல் வாழ்க்கை நடத்தியது மக்களிடையே வெறுப்பைப் பெற்றுத்தந்தது.
இவர் இயேசு சபையினருடன் நெருக்கமாக இருந்ததால் இஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் இவரின் தேர்வு குறித்து மகிழ்ச்சியடையவில்லை. இயேசு சபையினருக்கு எதிரான தடைகளை இவர் நீக்கவில்லை எனினும், காஸ்தல் தெல் சான் ஆஞ்சலோ என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இயேசு சபை அதிபர் Lorenzo Ricciயின் விடுதலைக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு செயல்படுமுன்னரே இயேசு சபை அதிபர் உயிரிழந்து விட்டார். Prussiaவிலும் Russiaவிலும் இயேசு சபையினரின் பணிகள் தடையின்றி தொடர அனுமதி வழங்கினார். இதற்கிடையில், ஆஸ்டிரியாவின் மன்னர் இரண்டாம் ஜோசப், திருஅவையை கொடுமைப்படுத்தத் துவங்கினார். புது புது சட்டங்களை ஆஸ்திரிய திருஅவைக்குள் புகுத்தினார். திருஅவைச் சொத்துக்களைக் கைப்பற்றினார். இதனால் வியன்னாவுக்கு நேரடியாகச் சென்றார் திருத்தந்தை 6ஆம் பயஸ். 1782ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி வியன்னா வந்தடைந்த திருத்தந்தை 6ஆம் பயஸை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர் மக்கள். ஆனால் பேரரசர் இரண்டாம் ஜோசப்பிடமிருந்து எதையும் பெறமுடியவில்லை திருத்தந்தையால். ஒரு பக்கம் திருத்தந்தைக்கு எதிராக செயல்பட மாட்டேன் என வாக்குறுதி அளித்துக்கொண்டு, மறுபக்கம் திருஅவைச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார் மன்னர். ஆனால், 1790ஆம் ஆண்டு பேரரசர் இரண்டாம் ஜோசப் மரணமடைந்ததைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவரின் சகோதரர் இரண்டாம் லியோபோல்டு காலத்தில் திருஅவையுடன் உறவு ஓரளவு சுமுகமானது. பிரான்சில் நடந்த புரட்சியின்போது அமைதிகாத்தார் திருத்தந்தை 6ம் பயஸ். அந்த புரட்சியின் போது உருவெடுத்த நெப்போலியன் போனபார்ட் 1796ல் இத்தாலியைக் கைப்பற்றினார்.
ஒருநாள் திடீரென திருத்தந்தையின் மாளிகைக்குள் நுழைந்த பிரெஞ்ச் காவலர்கள், அவரின் அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டதாகக் கூறி, அவரின் விரலில் இருந்த மோதிரத்தையும் கழற்றி, அவரை சிறைக்கைதிபோல் அழைத்துச் சென்று முதலில் Siena நகரிலும் பின்னர் Florence நகரிலும் சிறிது காலம் சிறைவைத்தனர். திருத்தந்தை 6ஆம் பயஸை பிரான்சுக்கு கொண்டுவரும்படி கட்டளையிட்டார் மன்னர் நெப்போலியன். ஆனால் 1799ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ந்தேதி, பிரான்ஸ்க்கான பாதையில் Valence என்னுமிடத்தில் காலமானார் திருத்தந்தை 6ம் பயஸ். அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட அவரின் உடல், 1801ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி எடுக்கப்பட்டு, 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி உரோம் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.
திருத்தந்தை 6ஆம் பயஸின் மரணத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் இராணுவம் எகிப்தில் தோல்வியைச் சந்தித்ததால், இத்தாலியிலிருந்தும் அவர்கள் வெளியேறுவது கட்டாயமாகியது. ஆஸ்திரிய இராணுவத்தின் பாதுகாப்புடன் வெனிஸ் நகரின் புனித ஜார்ஜ் பெனடிக்டைன் துறவு மடத்தில் கூடிய 35 கர்தினால்கள், 1800ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கர்தினால் Barnaba Chiaramontiயை புதிய திருத்தந்தையாக தேர்வு செய்தனர். அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை ஆஸ்டிரிய அரசு ஏற்க மறுத்ததால், இறுதியில் மூன்று மாத இழுபறிக்குப்பின் கியாராமோந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 வயதான அந்த பெனடிக்டன் துறவி, ஒரு கர்தினாலாகவும் ஏற்கனவே உயர்த்தப்பட்டிருந்தார். இவர் ஆஸ்டிரிய கப்பலில் உரோம் நகருக்கு கொண்டுவரப்பட்டார். பொறுப்பேற்றவுடனேயே, திருத்தந்தை 7ஆம் பயஸ் பிரான்ஸ் திருஅவை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினார். பாரிஸில் மன்னருக்கு முடிசூட்ட அங்கு பயணமானார். ஆனால் அங்கு சிறிது காலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் மன்னர் நெப்போலியன் மரணமடைய, 18ஆம் லூயி பதவிக்கு வந்தார். மன்னருக்கும் திருத்தந்தைக்கும் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.
திருத்தந்தை 7ஆம் பயஸ் சில ஜெர்மன் அரசர்களுடனும் அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1808ஆம் ஆண்டில் Boston, New York, Philadelphia, Bardstown ஆகிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். 1820லும், 21லும் மேலும் மூன்று மறைமாவட்டங்களை அங்கு உருவாக்கினார் (Charleston, Richmond, Cincinnati). இந்த வேளையில் பெரும் சித்ரவதைகளை அனுபவித்தது ஸ்பெயின் தலத்திருஅவை. அதன் சொத்துக்கள் அரசால் கைப்பற்றப்பட்டன. ஆனால் பிரெஞ்ச் படைகள் இஸ்பெயினுக்குள் புகுந்து ஆட்சியை வீழ்த்தியதால், திருஅவை சொத்துக்கள் திரும்ப பெறப்பட்டன. பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் திருத்தந்தைக்கு எத்தனையோ கொடுமைகளை வழங்கியுள்ள போதிலும், அவர் ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது, அக்குடும்பத்திற்கு உரோம் நகரில் அடைக்கலம் வழங்கினார் திருத்தந்தை. St. Helenaவில் சிறைவைக்கப்பட்டிருந்த நெப்போலியன் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு ஓர் ஆன்மீகக் குருவையும் அனுப்பிவைத்தார் திருத்தந்தை. மன்னிப்பதில் ஒரு முன்னுதாரணமாக இருந்தார் திருத்தந்தை 7ஆம் பயஸ். இவர்தான் இயேச சபையினர் மீதான தடைகளை நீக்கினார். 1823ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் நாள் தன் மாளிகையில் கீழே விழுந்து அடிபட்ட திருத்தந்தை 7ஆம் பயஸ், அதன்பின்னர் படுக்கையிலிருந்து எழவே இல்லை. இவர் உடல் சுகவீனமுற்று இருந்தபோதுதான் தூய பவுல் பெருங்கோவில் தீக்கிரையாகியது. 23 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 7ஆம் பயஸ் 1823ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி காலமானார்.
அன்பு நெஞ்சங்களே! திருஅவையில் அடுத்து பதவிக்கு வந்தார் திருத்தந்தை 12ம் லியோ. இவர் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
No Comments