
“திருச்சி சிவா என் தம்பி; நடக்கக் கூடாதது நடந்துவிட்டது”- முதல்வர் உத்தரவால் சமாதானம் பேச வந்த நேரு

‘அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் ஏன் திருச்சி சிவா பெயரைப் போடவில்லை?’ என திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், கே.என்.நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டியதும், அதைத் தொடர்ந்து கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டினுள் புகுந்து அடித்து நொறுக்கிய சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில்வைத்தே திருச்சி சிவா தரப்புக்கும், கே.என்.நேரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்கள் பிரச்னையின் வீரியத்தை அதிகமாக்கின. இதில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தை, எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துக்கொண்டு கடுமையாக விளாசித் தள்ளின. இந்த நிலையில்தான் திருச்சி சிவாவின் வீட்டுக்கே அமைச்சர் கே.என்.நேரு சென்று, நடந்த சம்பவம் குறித்துப் பேசினார்.
திருச்சி சிவாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சியிலேயே பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பாக இருந்தன. எந்த ஊரிலே என்ன நிகழ்ச்சி என்பதுகூட எனக்குத் தெரியாது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், சட்டமன்ற உறுப்பினர் அழைக்கும் இடங்களுக்கு நான் போவது வழக்கம். அப்படிப் போகிறபோது இந்த ராஜா காலனியில் ஒரு ஷட்டில் கோர்ட் திறக்க வேண்டுமென்று சொன்னார்கள். அது எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. என்னுடைய தொகுதி என்பதால் இங்கு வந்தேன். அப்போது சிலர் என்னிடம் வந்து ‘எங்களுடைய அண்ணன் பெயரைப் போடாமல் எப்படி வரலாம்?’ என்றார்கள். ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் போய்ப் பாருங்கய்யா… நான் என்னய்யா பண்ணுவேன்’ என்று சொல்லிட்டு அங்கிருந்து போய்விட்டேன்.
அதற்குப் பிறகு சில நடக்கக் கூடாத விஷயங்கள் அதுவும், கழகக் குடும்பத்திலே, கழகத்தில் இருப்பவருடைய வீட்டிலே நடந்தன. என்னுடைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், கறுப்புக்கொடி காட்டியவர்களை ஏற்றுவதற்காக ஒரு பெரிய போலீஸ் வேனை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்கள். அதனால் நடந்த சம்பவம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டேன். அதன் பிறகுதான் இப்படிச் சம்பவம் நடந்துவிட்டது என்றும், வழக்கு பதிவுசெய்து ஆட்களைத் தேடிவருகிறார்கள் என்பதும் தெரியவந்தது. அப்போதே சிவா எங்கிருக்கிறார், வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டாரா என்று கேட்டேன். கம்யூனிகேஷன் கேப்பால் இப்படி நடந்துவிட்டது. இனி அப்படி நடக்காது” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ‘நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தைக் கட்டிக்காத்து வருகிறவர்கள். உங்களுக்குள் இப்படி எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது’ என்றார். அப்போது ‘எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையுமே இல்லைங்கண்ணே. அவர் எங்க ஊர்க்காரரு’ன்னு நான் சொன்னேன். உடனே முதலமைச்சர் அவர்கள் ‘நீ நேரா போய்ப் பார்த்து, அவரைச் சரிபண்ணிட்டு, சமாதானப்படுத்திட்டு வா. உங்களுக்குள்ள எந்தவிதமான பிரச்னையும் இல்லைங்கிறதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்றார். நான் வந்து சிவாவிடம் பேசினேன். என்னைவிட அவர் இரண்டு வயது சிறியவர். தம்பி என்றுதான் கூப்பிடுவேன். ‘நீங்க ஒண்ணும் நினைக்காதீங்க. எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன். முதலமைச்சர் கேட்டபோதுகூட, அந்த வேலையையெல்லாம் நான் செய்வேனாங்க’ என்று சொன்னேன்.
முதல்வரோ ‘சிவா தி.மு.க-வில் ஒரு மூத்த தலைவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டால் அது கழகத்துக்கு நல்லதா?’ என்று கேட்டார். ‘எனக்கு ஒண்ணும் இல்லைங்க. நான் போய் அவரை சரியா 6 மணிக்கு பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்’ என்று சொன்னேன். சிவாவை வந்து பார்த்து மனசுவிட்டுச் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். அவரும் சொல்லியிருக்கிறார். இனி இது மாதிரி எதுவும் நடக்கக் கூடாது, நடக்காது” என்றார்.
#தரசச #சவ #என #தமப #நடககக #கடதத #நடநதவடடத #மதலவர #உததரவல #சமதனம #பச #வநத #நர
No Comments